நேபாள விமான விபத்தில் 19 பேர் பலி; 8 பேர் தமிழர்கள்!

நேபாளத்தில் நடந்துள்ள  விமான விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 8 பேர் திருச்சியை சேர்ந்த தமிழர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அவர்களின் உடல்களை திருச்சி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இமய மலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வட்டமடித்து காண்பித்துவிட்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டு திரும்பிக்கொண்டிருந்த விமானம் ஒன்று தரையில் நொறுங்கி விழுந்தது.

இதில் பயணிகள், சிப்பந்திகள் என அவ்விமானத்தில் இருந்த 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.

புத்தா ஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் பயன்படுத்திவந்த இந்த ‘பீச்கிராஃப்ட் 1900D’ ரக விமானம் மலைப் பகுதி ஒன்றில் கிழே விழுந்து பல துண்டுகளாக சிதறுண்டு போனது.

சம்பவ இடத்தில் இருந்து ஒரு நபர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார் என்றாலும், பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் மோசமான காலநிலை இருந்துவருவதால் மீட்புப் பணிகள் தடங்கலுக்குள்ளாகியிருக்கின்றன.

இந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பான்மையானோர் இந்திய சுற்றுலாப் பயணிகள் என்றும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளும் பலியாகியுள்ளனர்.

எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலைச் சிகரங்களைச் சுற்றிக் காண்பிக்க பல்வேறு நிறுவனங்கள் விமான சேவையை நடத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.