நியூயார்க் : “மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகியோரை எனது முன்மாதிரிகளாக பின்பற்றி வருகிறேன்” என்று மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்தார்.
அமெரிக்காவில் 17 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சூச்சி நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
உலகில் முதன் முதலில் அஹிம்சை எனும் ஆயுதத்தை கையிலேந்தியவர் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி. அஹிம்சையினால் மிகப் பெரும் புரட்சிகள்; அதன் மூலம் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று அவர் உணர்த்தினார். ஆதலால் மாணவர்களே, காந்தியைப் பற்றி படியுங்கள். காந்தி யார் என்பதும் அவர் எத்தகைய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் இந்தியாவின் மற்றொரு தலைவர் ஜவாஹர்லால் நேருவும் எனக்கு முன்மாதிரி. நேருவுக்கு கிடைத்த கல்வியைப் போலவே எனக்கும் கிடைத்தது என்றார்.
15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது குறித்துப் பேசுகையில், “மனித உரிமை ஆர்வலர் மார்டின் லூதர் கிங், எனது அப்பா ஆங் சான் உள்ளிட்டோரின் கருத்துகளைப் படித்தேன். வானொலியில் செய்தி கேட்பது, உடற்பயிற்சி, தியானம் உள்ளிட்டவற்றில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்” என்று ஆங் சான் சூச்சி தெரிவித்தார்.