2013 பட்ஜெட்டில் பினாங்கு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார்.
“பினாங்குக்கு எதுவும் இல்லை என்பதைப் பார்க்கையில் எரிச்சலாக இருக்கிறது”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், கடந்த பட்ஜெட்டில் பினாங்குக்கு 200 பேருந்துகள் கொடுப்பதாகக் கூறிய வாக்குறுதியைக்கூட நஜிப் காப்பாற்றவில்லை என்றார். “அந்தப் பேருந்துகள் இன்னும் வந்து சேரவில்லை”, என்று கூறிய அவர், “‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன’ என்கிறார்களே இதை எந்த வகையில் சேர்ப்பது?”, என்று குத்தலாகக் கேட்டார்.
பினாங்கில் கட்டுப்படியான விலையில் வீடுகள் போதுமான அளவில் இல்லை என்று பல புகார்கள் செய்யப்படுள்ளன.ஆனால் மத்திய அரசு அந்தப் பிரச்னையைத் தீர்க்க எதுவும் செய்ததில்லை.
இப்படியே போனால், அதற்கான நிதி ஆதாரங்களை பினாங்கு சுயமாகவே தேட வேண்டிய நிலை உருவாகலாம் என்று லிம் குறிப்பிட்டார்.
பினாங்கு மக்களும் வரி செலுத்துகிறார்கள்
பினாங்கில், 2008-இலிருந்து 12,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.மாநில அரசு 4,000வீடுகளையும் தனியார்துறை 8,000 வீடுகளையும் கட்டின.
போதுமான நிதி வசதி இருக்குமானால், மேலும் 38,000 வீடுகள் கட்டும் திட்டம் உண்டு என்றாரவர்.அவற்றில் 20,000 தனியார்துறையாலும் 18,000 மாநில அரசாலும் கட்டப்படும்.
“குவாந்தானிலும் மற்ற மாநிலங்களிலும் கட்டுப்படியான விலை வீடுகளை அவர் கட்டுகிறார்.ஆனால், இங்கு இல்லை…..பினாங்கில்தான் கட்டுப்படியான-விலை வீட்டுப் பிரச்னை மிக மோசமாக உள்ளது.
2013 பட்ஜெட்டில் பினாங்கும் ஏதாவது கிடைக்கும் என எதிர்பார்த்தது..
“பினாங்கு மக்களும் வரி செலுத்துவோர்தான் என்பதை பிரதமருக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.பினாங்குக்கு எதுவும் இல்லை என்றறிந்து ஏமாற்றம் அடைந்தோம்.
“அன்பு இல்லை என்றாலும் பரவாயில்லை.ஆனால், ஏற்கனவே உறுதிகூறப்பட்ட பேருந்துகள் கிடைக்கவில்லை, கட்டுப்படியான- விலை வீடுகள் இல்லை, எம்ஆர்டி-யும் இல்லை”, என்றார்.
2010-இல், அரசாங்கத்துக்குச் சொந்தமான பேருந்து நிறுவனமான ரெபிட் பினாங்கு, வருமாண்டில் மேலும் 200 பேருந்துகள் வந்து சேரும் என அறிவித்திருந்தது.
இதனிடையே, மாநில மசீச மகளிர் தலைவர் டான் செங் லியாங், நஜிப்பின் பட்ஜெட்டைக் குறைசொன்ன லிம்மை “இரட்டை நியாயம் பேசுபவர்” என்று சாடினார்.
பினாங்கில் தம் ஆட்சிக்கு ஆபத்தை உண்டாக்கும் எதையும் “இழிவுபடுத்திப் பேசுவதே” லிம்மின் வழக்கம் என்றாரவர்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைப் பொதுமக்களும் மற்றவர்களும் பாராட்டியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“மத்திய அரசு எல்லா மலேசியர்களுக்கும் உதவுகிறது.ஆனால், மாநில அரசு பதிவுசெய்துகொண்டுள்ள வாக்காளர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறது”, என்றார்.
“பட்ஜெட்டில் எல்லா மாணவர்களுக்கும் உதவித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், பினாங்கில் பெற்றோர் வாக்காளராக இருந்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு நிதிஉதவி கிடைக்கும்.மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் தனியே வாழும் தாய்மார்களுக்கான திட்டங்கள், புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கான திட்டங்கள் ஆகியவற்றிலும் இப்படித்தான்.
“ஏன் இப்படி? பினாங்கில் அவரது ஆட்சியை நிலைநிறுத்தத்தானே இப்படியெல்லாம் செய்கிறார்? அவரது ஆணவமும், இரட்டை நியாயம் பேசும் போக்கும் தாங்க முடியவில்லை”, என்றவர் வலியுறுத்தினார்.