இலங்கையில் நிலவும் இனப் பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசியல் தீர்வை இலங்கை அரசு கொண்டு வரவேண்டும் என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
நியோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் பொதுச் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிசிடம் ஐநா பொதுச் செயலர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள அண்மைய முயற்சிகளையும் – மீள் குடியேற்றம் சீரான தொடர் முன்னேற்றம் குறித்தும் தான் கவனத்தில் கொண்டுள்ளதாக பான் கி மூன் தெரிவித்தாதக ஐ.நாவின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
முன்னதாக ஐ.நா அவையில் பேசிய ஜி எஸ் பீரிஸ் இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு எதிர்கட்சிகள்தான் காரணம் என அவர்கள் மீது பழிபோட்டார்.
“இலங்கை அரசு நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை ஆராய ஒளிவு மறைவற்ற ஐனநாயக பொறிமுறையை உருவாக்க முன்வந்துள்ளது. அரசு முன்வைத்த நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு தமது பிரதிநிதிகளை சில எதிர் கட்சிகள் அறிவிக்கவில்லை” என்றார் ஜி எல் பீரிஸ்.
இலங்கை அரசு மீதான பன்னாட்டு அழுத்தங்கள் மெதுவாக ஆனால் சீராக உயர்ந்து வருவது போல பார்க்கப்படும் சூழலில் இலங்கைப் பிரச்னையில் வெளிநாட்டுத் தலையீடு கெடுதலையை விளைவிக்கும் என்றும் பெரிஸ் எச்சரித்தார்.