கொழும்பு: இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவிலும், இந்திய வீரர்கள் இலங்கையிலும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர் என்று கூறிய இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா, “தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமே தகவல் தருகிறோம். எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்பு படை அணியை சார்ந்த 45 உயர் அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா செல்ல உள்ளனர்; முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும் என்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய புரிந்துணர்வு உள்ளது. ஆனால் தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான சில குரல்கள் ஒலிக்கின்றன. இது குறித்து இலங்கை அரசு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்திய மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் நாங்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவதையே விரும்புகிறோம் என்று இலங்கையின் பொருளாதார வளர்ச்சி துறை அமைச்சரும் அதிபர் ராஜபக்சேவின் சகோதருமான பஷில் ராஜபக்சே கூறியுள்ளார்.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான சில குரல்கள் ஒலிக்கின்றன. இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இந்தியாவின் ஒரு சிறிய பகுதிதான் தமிழகம். இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்புகளுக்கு இந்த சிறிய பிரதேசம் சவாலாக அமையாது என்றார் ஜகத் ஜெயசூரியா.

























