கொழும்பு: இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் பலர் இராணுவத்தினரிடம் சிக்கினர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டுஈராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் 60 விடுதலைப் புலிகள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாகவும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததும் மற்றும் நாடு கடந்த தமிழீழம் அரசை அமைக்கும் ரகசிய சதித்திட்டத்தில் புலம் பெயர் தமிழர்களுடன் தொடர்பு வைத்துள்ள நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
தகவல் தொழில் நுட்பம் மற்றும் கைத்தொலைபேசிகள் மூலம் வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்து அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்பட்ட ஆதாரங்களை தீவிரவாத விசாரணை பிரிவு கண்டுபிடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்த அனுராதபுரம், வவுனியா, மன்னார், வெலிக்கடை ஆகிய சிறைகளில் 4 புதிய உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 300 விடுதலைப்புலிகளில் 150 பேர் மீது மோசமான குற்றங்கள் இழைத்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனவே அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
ஆனால் இலங்கை இராணுவத்தினர்தான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.