இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்காது: ஐ.தே.க

இலங்கையில் 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கூறியிருக்கும் கருத்தானது, அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அதிகாரப் பரவலாக்கலை வழங்கப்போவதில்லையென்பதற்கான உறுதியான நிலைப்பாடு ௭ன்று இலங்கையின் எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு பல தடவைகள் பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே உட்பட பல முக்கியஸ்தர்கள் பதின்மூன்றுக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவோமென உறுதியளித்தனர். இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் 13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இது ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்தின் உண்மையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்னைக்கு தீர்வாகவே 13-ஆவது திருத்தம் இலங்கையில் கொண்டு வரப்பட்டது.

அதனை ராஜபக்சே அரசாங்கம் தூக்கியெறிய முயற்சிப்பதானது இந்தியாவுடனான நட்புறவை பாதிக்கும். அதேவேளை தமக்கு ௭ந்தவிதமான அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை ௭ன்ற அவ நம்பிக்கையை தமிழ் மக்கள் மனதில் தோற்றுவிக்கும் ௭ன்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

TAGS: