மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு ஐந்து மாதங்களாகிவிட்ட போதிலும், தமது சொந்தக் காணிகளுக்கு இன்னும் தங்களை அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்டம் கருநாட்டுக்கேணி மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.
மீள்குடியேற்றம் முல்லைத்தீவில் இருந்து சுமார் 18 மைல் தொலைவில் உள்ள கொக்கிளாய் பகுதியில் அதிகாரிகள் தம்மை ஒரு வெட்டவெளியில் கூடாரங்களில் தங்க வைத்துள்ளதாகவும், அங்கு தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் என்பன பற்றாக்குறையான நிலையிலேயே தாங்கள் இருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
முப்பது வருடங்களுக்கு முன்னர் தமது கிராமம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றியதையடுத்து, நிரந்தரமாக இருக்க இடமின்றி, போர்ச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்து பின்னர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இந்த மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.
தமது பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் அறிவித்திருந்ததையடுத்தே, கடந்த மார்ச் மாதம் தங்களை தமது பிரதேசத்திற்கு அதிகாரிகள் மீள்குடியேற்றததிற்காக அழைத்து வந்த போதிலும் இன்னும் தங்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தொழில் வாய்ப்பின்றியும், நிவாரணத்தை நம்பியும் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்தி வரும் இந்த மக்கள் தங்களை உடனடியாகத் தமது கிராமத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியிருக்கின்றனர்.
கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாததன் காரணமாகவே மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.