ஐ. நா. மனித உரிமை பேரவையில் எதிர்வரும் முதலாம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்க இந்தியா செயற்பட வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழர்களின் அரசியல் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னைக்கும் இலங்கை அரசு பொறுப்புடமையுடன் செயற்படவில்லை. கபட நாடகத்தின் ஊடாக சர்வதேச நாடுகளை ஏமாற்றி இலங்கை தமிழர்களின் தீர்வுத்திட்டங்களை தட்டிக் கழித்தே வந்துள்ளது என்று அக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அ. தி. மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா சுட்டிக் காட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் தமிழக முதல்வர் ஜெலலிதா தலைமையில் நடைபெற்றது. இதன் போது இலங்கை தமிழர் விவகாரம், சட்டப் பேரவை கூட்டம் மற்றும் சட்ட மன்ற வைர விழா போன்ற விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகவோ பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலோ எவ்வகையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, மாறாக இறுதிப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதே நாடுகளால் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு தீர்வுத் திட்ட பேச்சுக்களை காட்டியே சமாளித்து வந்துள்ளது.
இந்நிலையில் இந்திய மத்தியரசு இலங்கை தமிழர்களின் தீர்வு விடயத்தில் தெளிவாகவும் கடும் போக்குடனும் செயற்பட வேண்டும். குறிப்பாக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் தேதி ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட உள்ள ஐ. நா. மனித உரிமை பேரவையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படும்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த அமைச்சரவை கூட்டம் தீர்மானித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இத் தீர்மானம் நாளை செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.