இலங்கையில் கடுமையான மழை; இயல்பு நிலை பாதிப்பு

இலங்கையின் வடபகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாக்கத்தையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காற்று மழையுடன் கூடிய சீரற்ற காலை நிலை காரணமாக வடக்கு மற்றும் ஏனைய பகுதி மீனவர்கள் கடலுக்குத் தொழிலுக்குச் செல்லவில்லை.

தாழமுக்கம் காரணமாக கடலிலும் காற்றுவீசும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே, அறிவித்திருக்கின்றது.

நேற்று மதியம் வரையிலான 24 மணிநேர காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வடபகுதியில் இடியுடன் கூடிய அதிகூடிய மழை வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு கூரை விரிப்புகள் தரைவிரிப்புக்கள் போன்றவற்றைத் தருமாறு கோரியிருப்பதாகவும், அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 127.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இம்மாவட்டத்தில் அடைமழை பெய்து வருதால் வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

TAGS: