சரக்குக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் மூழ்கடித்த நிலாம் புயல்!

கொழும்பு: மியான்மரிலிருந்து இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் நிலாம் புயலில் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணித்த 22 பேரில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

வியட்னாம் நாட்டுக்கு சொந்தமானது சாய்கோயின் குயின் என்ற சரக்குக் கப்பல். இக்கப்பல் மியான்மரில் இருந்து 6,500 டன் மரங்களை ஏற்றிக் கொண்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இலங்கைக் கடற்பரப்பில் இக்கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போது அங்கு மையம் கொண்டிருந்த நிலம் புயலில் சிக்கி மூழ்கியது.

இத்தகவல் வியட்னாம் மற்றும் இலங்கை கடற்படைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இலங்கை கடலோரக் காவல்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 10 மணி நேர மீட்பு தேடுதல் மற்றும் நடவடிக்கையில் கப்பலில் இருந்த 22 பேரில் 18 பேர் மீட்கப்பட்டனர். கப்பல் கேப்டன் உட்பட 4 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

நிலம் புயல் காரணமாக ஏற்கெனவே சென்னையில் சரக்குக் கப்பல் ஒன்று தரை தட்டியது குறிப்பிடத்தக்கது.