புலிகள் மீண்டும் எழுந்து வர வேண்டுமா? சிங்கள அமைச்சருக்கு தமிழ் எம்பி பதிலடி!

விடுதலைப் புலிகளுக்கு பயந்தே அதிகாரப் பகிர்வு கொள்கையும், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் கொண்டு வரப்பட்டது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு பயந்துத்தான், அதிகாரப்பகிர்வு கொள்கை கொண்டுவரப்பட்டதென்றால் இன்று தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள மீண்டும் புலிகள் வரவேண்டுமா? புலிகள் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச சொல்கிறாரா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமாகிய மனோ கணேசன் கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது அதிகாரப் பகிர்வு. இதைதான் உலகம் திரும்ப, திரும்ப சொல்கிறது. ஆனால், மகிந்த அரசாங்கம் அதிகாரத்தை பகிர்ந்து தர தயார் இல்லை. இலங்கையில் தலைமை நீதிபதிக்கு எதிராக மகிந்த அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் மூலம் உலகத்துக்கு வழங்கிய செய்தி இதுதான்.

மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்ட ‘திவி நெகும’ எனும் சட்டம், மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கிறது. அதை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையின் மூலம் சட்டமாக்க முடியாது என தலைமை நீதிபதி தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டார். வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் பதின்மூன்றாம் திருத்தத்தில் கை வையுங்கள். பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள்; உங்களுக்கு முடியுமானால் திருத்தத்தையே திருத்துங்கள் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பு சொல்லிவிட்டது.

இதனால்தான் இவர்களுக்கு இன்று தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக மீது மகிந்த அரசுக்கு கடும் கோபம். ஏனென்றால், சத்தமில்லாமல் பதின்மூன்றின் மீது கைவைக்க நினைத்தவர்களுக்கு அதை பகிரங்கமாக செய்ய வேண்டிய நிலைமையைலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக ஏற்படுத்திவிட்டார். உலகம் முழுக்க போய், பதிமூன்றிற்கு மேலே போட்டு தருகிறேன் என்று சொன்னவர்கள், இன்று இருப்பதையும் திருட முயல்கிறார்கள் என்பது பகிரங்கமாகிவிட்டது. என்று மனோ கணேசன் எம்பி குற்றம் சாட்டினார்.

மக்களின் நலனுக்காக தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக மீது அரசாங்கம் கை வைக்கிறது, அதை எதிர்த்து நாம் போராடுவோம். இன்றைய சூழலில் அவருக்கு எங்கள் உறுதியான ஆதரவை நாம் தெரிவிக்கிறோம்.

TAGS: