மனித உரிமைக் கட்சித் தலைவர் பி.உதயகுமார், இண்ட்ராபின் 18 கோரிக்கைகளில் ஐந்தையாவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2013 ஜனவரி முதல் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் அப்போதுதான் அவரைச் சந்திக்க முடியும் என்கிறார்.
இண்ட்ராப் அதன் 18 கோரிக்கைகளை 2007 ஆகஸ்ட் 12-இல், அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியது. ஆனால், அவப்பேறாக இன்றுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று உதயகுமார்(இடம்) கூறினார்.
13வது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் பிஎன் அரசாங்கம் இண்ட்ராப்பைச் சந்திக்க விரும்புவதை வரவேற்ற அவர், “எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவை நிறைவேற்றப்படும் என்று காத்திருந்தோம், ஒன்றும் நடக்கவில்லை. இப்போது ஐந்தாண்டுகள் மூன்று மாதங்கள் கடந்து விட்டன”, என்றார்.
“இண்ட்ராப் விரும்புவது இந்தியர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு. எப்போதோ ஒருமுறை செய்யப்படும் தற்காலிக பண உதவியை அல்ல”, என்று மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டபோது உதயகுமார் கூறினார்.
இண்ட்ராப் நஜிப்புடன் பேச்சு நடத்த வேண்டுமானால் அரசாங்கம் 2013 ஜனவரி முதல் தேதிக்குள் இண்ட்ராபின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாரவர்.
அந்தக் கோரிக்கைகளாவன:
-அனைத்து 523 தமிழ்ப்பள்ளிகளும் ஜனவரி முதல் நாளுக்குள் முழு உதவிபெறும் அரசு பள்ளிகளாக ஆக்கப்பட்டு அவற்றுக்கு நிலப் பட்டாகளும் வழங்கப்பட வேண்டும்.கூடவே அப்பள்ளிகளில் பாலர்பள்ளிகளையும் அமைக்க வேண்டும்.
-150,000 இந்திய குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இன்றி நாடற்றவர்களாக உள்ளனர். பிறப்புச்சான்றிதழ் இன்றி நாடற்ற மக்களாக உள்ள இந்திய பெற்றோர் எண்ணிக்கை தோராயமாக 300,000. இவர்களுக்குப் பிறப்புச்சான்றிதழும் அடையாள அட்டைகளும் கொடுக்கப்பட வேண்டும் என இண்ட்ராப் விரும்புகிறது.
-10,000 இடங்கள் கியாட்மாரா(அரசாங்கம் நடத்தும் இளைஞர் மையங்கள்)-வில் இந்திய இளைஞர்கள் தொழில்திறன் பெறுவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
-10,000 இடங்கள் இந்தியர்களுக்கென யுனிவர்சிடி டெக்னோலோஜி மாராவில் ஒதுக்கப்பட வேண்டும்.
-10,000 இந்தியர்களுக்கு பெல்டா, பெல்க்ரா, ரிஸ்டா போன்ற அரசாங்க நிலத் திட்டங்களில் நிலம் வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் இந்தியர் விவகாரங்களுக்கான குழுவின் தலைவரான நஜிப், இண்ட்ராபின் இந்தக் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். இல்லையேல், இண்ட்ராப் பேச்சுகளில் கலந்துகொள்ளாது என்று உதயகுமார் கூறினார்.
நேற்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், இந்தியர் பிரச்னைகள் குறித்து இண்ட்ராபுடன் விவாதிக்க நஜிப் விரும்புவதாக அறித்திருந்தார்.
“இண்ட்ராப், கடுமையான போக்கைக்கொண்ட அமைப்பாக இருந்தாலும் அதையும் அரவணைத்துச் செல்லவே விரும்புகிறோம்”,என்று நஸ்ரி குறிப்பிட்டார்.
கடந்த வாரம் இண்ட்ராப் தலைவர்கள் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராகிமை சந்தித்துப் பேசியதை அடுத்து இப்போது பிஎன் அரசு அவர்களைச் சந்திக்க விரும்புவதுபோல் தெரிகிறது.