புதிய அம்சங்களுடன் தேர்தல் இணையத்தளம்: பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது பிகேஆர்

பிகேஆர் மூன்று புதிய அம்சங்களுடன் தனது தேர்தல் இணையத் தளத்தைத் திருத்தி அமைத்துள்ளது. ஆதரவாளர்கள் கட்சிக்கு எளிதாக நன்கொடை வழங்குவதற்கு பாதுகாப்பான வழியும் அவற்றுள் ஒன்றாகும்.

‘பணம் செலுத்துவதற்கு கிரடிட் கார்டு மற்றும் இதர வழிகளும் அதில் உள்ளன. தங்கள் நன்கொடைகள் எங்கள் தேர்தல் முயற்சிகளுக்குச் செல்வதை அவை நன்கொடையாளர்களுக்கு உறுதி அளிக்கும்,” என பிகேஆர் தொடர்பு இயக்குநர் நிக் நஸாமி நிக் அகமட் இன்று கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் அவர் நிருபர்களிடம் பேசினார். கட்சியின் திருத்தப்பட்ட இணையத் தளத்தை அவர் அறிமுகம் செய்தார். இன்று காலை 7.00 மணி தொடக்கம் அது இயங்குகிறது.

நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த அவர், 10 ரிங்கிட் நன்கொடை பிகேஆர் தொண்டர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு உணவளிக்கப் போதுமானது என்றார்.

பிகேஆர் தேர்தல் பிரச்சாரம் குறித்த புதிய தகவல்களை இணைய மக்கள் அறிந்து கொள்வதற்கு தங்களை பதிந்து கொள்ளவும் இணையத் தளத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் செய்திகள், சொற்பொழிவுகள், காணொளிகள், முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் காணப்படும் செய்திகள் ஆகியவற்றை இணையப் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளவும் அதில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பாஹாசா மலேசியாவிலும் ஆங்கிலத்திலும் உள்ள அந்த இணையத் தளம் கட்சியின் நீல நிறத்தைக் கொண்டுள்ளது.

அந்தக் கட்சியின் எதிரியான பிஎன் மேற்கொள்ளும் இணையப் பிரச்சாரத்துக்கு ஈடாக புதிய இணையத் தளம் விளங்குமா என வினவப்பட்ட போது நிக் நஸாமி ‘ஆமாம்’ என்றார்.

“பிஎன் இணையப் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் சிரமத்தை எதிர்நோக்கும் பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைப் போல் அல்லாது அது நிச்சயமாக சமநிலையான ஆட்டக்களமாக இருக்கும்,” என அவர் மேலும் சொன்னார்.

TAGS: