இலங்கை அரசாங்கம் காலதாமதமின்றி நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொண்டு அங்குள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பை விரைந்து உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தோன்றியுள்ள பல பிரச்னைகள் மற்றும் முரண்பாடுகள் விரைந்து தீர்க்கப்படுவதையே சர்வதேச சமூகம் பெரிதும் விரும்புகிறது. எனவே அங்கு தோன்றியுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் விடயங்களில் அக்கறை காட்ட வேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவால் தன் நாட்டிற்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கமுடியும் என நாங்கள் நம்புகின்றோம். நாட்டில் வாழும் சகல மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறுபான்மை தமிழ் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் மனித உரிமைகள் உறுதிப்படுத்தபடாது இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்பட்டதாக கருத முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை என்பது அகில உரிமையாகும் எனவும் இலங்கையை மட்டும் இலக்கு வைத்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் உலகின் அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதுடன் அனைவரும் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடு என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.