முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் 1800 பேர் விடுதலை

இலங்கையில் புனர்வாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 1800 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் அவர்களது உறவினர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போர் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு போரின் இறுதி கட்டத்தில் 11,600-க்கும் சற்று அதிகமான விடுதலைப் புலிகள் தம்மால் பிடிக்கப்பட்டார்கள் அல்லது சரணடைந்தார்கள் என்று இலங்கை அரசு அறிவித்தது.

தடுப்பில் வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை அளித்து அவர்களை கட்டம் கட்டமாக இலங்கை அரசு விடுவித்து வந்தது.

வழக்குகளை எதிர்கொள்ளும் 63 பெண்கள் உள்ளிட்ட சுமார் 1400 போராளிகளே தற்போது தடுப்பில் இருப்பதாகவும் அவர்களையும் விரைவாக விடுவிக்க அரசு முயற்சி மேற்கொள்வதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைத் துறை அமைச்சகத்தின் ஆலோசகர் சிவலிங்கம் சதிஷ்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 30 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். மற்றவர்கள் சனி மற்றும் ஞாயிறு தேதிகளில் உறவினர்களிடம் கையளிக்கப்படுவார்கள் என்றும் சதிஷ்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.