அண்மையில் இலங்கையின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பல கைதிகள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையில் வன்முறை அடக்கப்பட்ட பின்னர் கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கை இராணுவ கமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறப்பு அதிரடிப்படையினரால் கைதிகள் பலர் கொல்லபபட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கலவரம் முற்றாக முடிபுக்கு வந்தபின்னர் சிறப்பு அதிரடிப் படையினர் பெயர்ப் பட்டியல் ஒன்றுடன் வந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்தனர். இவ்வாறு வெளியே அழைக்கப்பட்ட 11 பேர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் நடைபெற்ற உண்மையான நிலை குறித்த தகவல்கள் வெளியே கசிவதைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் பலரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அச்ச சூழ்நிலை காரணமாக பல தகவல்களை வெளியிட அஞ்சுவதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

























