லினாஸ் எதிர்ப்பு இயக்கமான ஹிம்புனான் ஹிஜாவ் டாத்தாரான் மெர்தேக்காவில் கூடுவதற்குத் திட்டமிட்டிருந்தால் அதனை போலீசுக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அமைப்பு இது வரை அவ்வாறு செய்யவில்லை.
“2012 அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ் அது (ஹிம்புனான் ஹிஜாவ்) அறிவிப்புக் கொடுக்க வேண்டும் ஆனால் அதனைச் செய்யவில்லை,” என டாங் வாங்கி ஒசிபிடி ஜைனுடின் அகமட் மலேசியாகினியிடம் குறுஞ்செய்தி வழி தெரிவித்தார்.
அவர் அந்த விஷயம் குறித்து மேலும் விவரங்கள் தரவில்லை. ஏனெனில் அவர் அப்போது கூட்டத்தில் இருந்தார்.
பசுமை ஊர்வலத்தினர் டாத்தாரானைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற வேண்டும் என கோலாலம்பூர் மேயர் அகமட் பெசால் தாலிப் நேற்று கூறியிருந்தார்.
குவாந்தானிலிருந்து கோலாலம்பூருக்கு 300 கிலோ மீட்டர் ஊர்வலத்தை மேற்கொண்டுள்ள ஹிம்புனான் ஹிஜாவ் போராளிகள் வரும் ஞாயிற்றுக் கிழமை நண்பகல் வாக்கில் டாத்தாரான் மெர்தேக்காவில் தங்கள் ஊர்வலத்தை நிறைவு செய்ய எண்ணியுள்ளனர்.
அவர்கள் அன்றிரவு அங்கு தங்கி அடுத்த நாள் திங்கட்கிழமை அதே இடத்தில் எம்பி-க்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.