இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் எரிவாயு

இலங்கையின் வடமேற்கே மன்னார் கடற்பரப்பில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக கடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து இந்தத் தகவல் மகிந்த ராஜபக்சேவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் கடலுக்கடியில் 33 ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் எரிபொருள் வளம் காணப்படுவதாக கடலுக்கடியில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களின் மூலம் தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

இலண்டனில் பதிவு பெற்றுள்ள கெயின் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகிய கெயின் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய கெயின் சிறீ லங்கா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் பணியை மன்னார் கடற்பரப்பில் ஆரம்பித்திருந்தது.

எண்ணெய் அகழ்வு முயற்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த எட்டு இடங்களில் ஒன்றிலேயே இப்போது எரிவாயு கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் இருப்பது பற்றிய தகவல்கள் கிடைத்ததையடுத்து, இந்திய மற்றும் சீன தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எரிபொருள் கிணறு தோண்டுவதற்கான அனுமதி இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த போதிலும் அந்த நிறுவனங்கள் திட்டமிட்டபடி தமது பணிகளைத் தொடங்கவில்லை.

கடற்படுகையில் 4442 அடி ஆழத்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தத்தக்கதா இல்லையா என்பதை அறிய மேலும் அகழ்வு வேலைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கெயின் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

TAGS: