கார்த்திகை நாள் வழிபாடுகளில் சிங்கள இராணுவம் தலையிடுவதாக குற்றச்சாட்டு

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் இலங்கை பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27-ம் தேதியன்றே இம்முறை கார்த்திகை நாள் வருவதால்தான் இந்த தலையீட்டையும் தடைகளையும் இந்துக்கள் எதிர்நோக்குவதாக அவர் கூறுகின்றார்.

கார்த்திகை நாளிலும் அதனை அடுத்த சர்வாலய தீப நாளிலும் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுதல் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடு செய்தல் வழக்கம்.

இம்முறை அவற்றைத் தடுக்கும் வகையில் இராணுவத்தினராலும் காவல் துறையினராலும் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து தனது கவனத்திறகு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி காவல் துறை துணை மா அதிபர் ஆகியோரை சந்தித்து நேரில் முறைப்பாடு செய்ய திங்கள் கிழமை சென்றிருந்த போதிலும சந்திக்க முடியாத நிலையில் எழுத்து மூலம் அவர்களின் கவனத்திற்குதான் தெரியபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளுக்கு தடை என்று இலங்கை பாதுகாப்பு தரப்பினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: