இலங்கை கடற்பரப்பில் கடந்த 4 மாதங்களாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சாக் சிரியஸ் என்ற சரக்குக் கப்பலில் சிக்குண்டுள்ள சிப்பந்திகள் உணவுக்கும் தண்ணீருக்கும் கஷ்டப்படுவதாகக் கூறுகின்றனர்.
மலேசிய கப்பல் நிறுவனத்துக்கும் அதற்கு கடன் கொடுத்த வங்கி ஒன்றுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் இந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பர்மீயர்கள் பத்து பேர், இலங்கையர் ஐந்து பேர் என மொத்தம் பதினைந்து சிப்பந்திகள் இந்தக் கப்பலுக்குள் சிக்குண்டுள்ளனர்.
கையிருப்பில் இருந்த உணவைக் கொண்டும், ஆரம்பத்தில் கிடைத்துவந்த இலங்கையின் உணவு உதவியைக் கொண்டும் சமாளித்துவந்தாலும், இப்போது மிகக் குறைவான உணவே இருப்பதாக பிபிசியிடம் பேசிய இலங்கைப் பிரஜை ஒருவர் தெரிவித்தார்.
குடிநீர் இல்லாதபடியால் சேமிக்கப்படும் மழைநீரை மட்டுமே தாங்கள் குடிக்கவும், சமையலுக்கும், துப்புரவுக்கும் பயன்படுத்திவருவதாக அவர் கூறினார்.
மீண்டும் ஒரு நிறுவனத்தில் கப்பல் சிப்பந்தியாக வேலை கிடைப்பதில் பிரச்னை வரலாம் என்பதால் தனது பெயரை வெளியிட வேண்டாமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கப்பலில் இருந்து தாங்கள் வெளியே வர அனுமதி வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்று அவர் கூறினார்.
கப்பல்தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளதே ஒழிய தாங்கள் கைதிகள் அல்ல என்று குறிப்பிட்ட அவர், தம்மில் சிலர் இலங்கைப் பிரஜையாக இருந்தும் இலங்கைக்குள் தாம் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பது தமக்கு விளங்கவில்லை என்று தெரிவித்தார்.
இலங்கை அரசும் பர்மீய அரசும் இவ்விவகாரத்தில் தலையிட்டு தம்மை இக்கப்பலில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.