மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012

கடந்த ஆண்டுகள் போலவே மாபெரும் எழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நிகழ்வாக, 2012 நிகழ்வு கனடாவின் மாக்கம் நகரில் நடைபெற்றது.

கனடாத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் வழமைபோல் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாபெரும் மாவீரர் நினைவு மண்டபத்தில் அதிகாலை 6.45 மணிக்கே முதல் அமர்வு ஆரம்பமாகியது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது அவ்வதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தங்திருந்தனர். முதல் மாவீரர் லெப். சங்கர் வீரச்சாவடைந்த தாயக நேரமான மாலை 6.07-க்கு கனடாவிலும் ஈகைச்சுடர் ஏற்றும் வகையிலேயே முதல் நிகழ்வு அதிகாலை வேளையிலேயே ஆரம்பமாகியது.

கனடிய தேசியக் கொடியேற்றம், தமிழீழ தேசியக்கொடியேற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஈகைச் சுடறேற்றம், அமைதி வணக்கம், துயிலும் இல்லப்பாடல், கார்த்திகைப்பூ மலர் வணக்கம் என்பவை நடைபெற்றன. மக்கள் சாரை சாரையாக வந்து மலர் வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து எழுச்சிக்கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இதே போன்று இரண்டாவது அமர்வு மதியம் 12 மணிக்கும், மூன்றாவது அமர்வு பிற்பகல் 3.30 மணிக்கும் மாலை இறுதி அமர்வு இரவு 7 மணிக்கும் ஆரம்பமாகின.

சிங்கள அரச பயங்கரவாதம் எல்லை கடந்து புலம் பெயர்ந்த தளங்களிலும் அச்சுறுத்தல் விட ஆரம்பித்துள்ள நிலையில் தங்கள் உரிமைகளுக்காவும், தங்கள் தாயக உறவுகளுக்காவும் முழுமையாக போராட்டத்திற்கு கனடியத் தமிழ் உறவுகள் தயார் என்பபை பறைசாற்றுவது போன்றே கனடியத் தமிழர்களின் மாவீரர் நாள் எழுச்சி வெளிப்பட்டது.

மாவீரர்களால் ஈழத்தமிழர்களிடையே ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமையை எக்காரணத்திற்கும் சிதைக்க அனுமதியோம் என்பதை ஒரே நிகழ்வில் ஒன்றாக அணிதிரண்டமை தமது சக புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் கனடியத் தமிழர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர் என்றார் அந்நிகழ்வில் கலந்துகொண்ட மூத்தவர் ஒருவர்.

TAGS: