தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது விஞ்ஞான ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் உலகத்திலே மூன்று கரந்தடிப் படைத் தலைவர்கள் என 1990-ல் இந்திய பத்திரிக்கை கருத்து வெளியிட்டிருந்தது.நெல்சன் மண்டேலா தன்னுடைய காலத்தில் அந்த நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுக்கொண்டார்.
யசீர் அரபாத் உயிரோடு இல்லாவிட்டாலும் இன்று அந்த நாடு உலகப் பந்திலே அந்தஸ்தை பெற்றுள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால், தென்னாபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகள் அனைத்துலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அவ்வாறானதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இனவாத அரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழர்களது பிரச்னைகளுக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக சிறிதரன் எம்பி விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.