அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் நினைவு நாளை அனுஷ்டித்த மாணவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தியதோடு அச்சம்பத்தில் தொடர்புடைய நான்கு பல்கலைக் கழக மாணவர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
சிங்களப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படி வடகிழக்கில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றினை நேற்று மேற்கொண்டிருந்தனர். “கைது செய்த எமது சகோதரர்களை உடனடியாக விடுதலை செய்” என கோசங்களை எழுப்பியவாறு கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் யாழ். நகரில் எழுச்சி பூர்வமாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேற்றம்!
மாவீரர் நாளை அனுஷ்டித்தமைக்காக பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினரும், சிங்களப் படையினரும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையால் யாழ். பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, யாழ் பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து கொழும்பில் பெருந்திரளான சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.