பெர்சே 3.0 பேரணியின் போது தமக்குக் காட்டப்பட்ட 10 வீடியோக்களை பல முறை பார்த்த போதும் அவற்றிலிருந்து போலீசார் முரட்டுத்தனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு போலீஸ் அதிகாரியைக் கூட முன்னாள் டாங் வாங்கி ஒசிபிடி முகமட் சுல்கார்னெயின் அப்துல் ரஹ்மானால் அடையாளம் காட்ட முடியவில்லை.
“உதவியாளர்கள் தொடக்கம் துணை ஒசிபிடி வரையில். யாருமில்லை,” என சுல்கார்னெயின் கூறினார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் பட்டாளங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கக் கூடும் என்பதால் தம்மால் அடையாளம் காட்ட முடியவில்லை என அவர் நம்புகிறார்.
டாத்தாரான் மெர்தேக்காவுக்கு போலீசார் கட்டம் கட்டமாக வந்து சேர்ந்ததும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலர் பேரணிக்கு முதல் நாளும் சிலர் ஏப்ரல் 28ம் தேதி காலையிலும் அங்கு வந்தடைந்ததாக சுல்கார்னெயின் தெரிவித்தார்.
தூய்மையான தேர்தல்களைக் கோரி நடத்தப்பட்ட டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவராக இருந்த அவர், ஏற்கனவே அந்த விவகாரம் மீது மனித உரிமை ஆணைய விசாரணையில் செப்டம்பர் 24ம் தேதி சாட்சியமளித்துள்ளார்.
போலீஸ் முரட்டுத்தனத்தைக் காட்டும் 10 வீடியோ ஒளிப்பதிவுகள் தமக்குக் காட்டப்பட்டதாக அவர் தமது சாட்சியத்தில் சொன்னார். சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர்கள் மற்றும் அவர்களுடைய அதிகாரிகளின் பெயர்கள் ஆகியோருடன் மீண்டும் திரும்புவதாக சுல்கார்னெயின் விசாரணைக் குழுவுக்கு உறுதி அளித்தார்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவர் மீண்டும் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். ஆனால் தேவையான ஆதாரத்தை அவரால் வழங்க முடியவில்லை.