கிளிநொச்சி: இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 21 தமிழ்ப் பெண்கள் இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளிநொச்சியில் உள்ள இலங்கை இராணுவ பெண்கள் படைப்பிரிவின் 6-வது பட்டாலியனில் தமிழ்ப் பெண்கள் அண்மையில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவர்களில் 21 பேர் திடீரென மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் இப்பெண்களை குடும்பத்தினரும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இராணுவத்தில் இணைக்கப்பட்ட 6 பெண்கள்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் வணிகசூரிய கூறியிருக்கிறார்.
ஆனால் 21 தமிழ்ப் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அனைவரும் அதிர்ச்சியடைந்து போனவர்களாக இருக்கின்றனர் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்தப் பெண்கள் ஏன் இரவோடு இரவாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்பது பற்றி இலங்கை அரசுத் தரப்பில் விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை, சுகயீனம் காரணமாக மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களின் உறவினர்கள், அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
தன்னுடைய பிள்ளையும் ஏனைய சில பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கிவிழுந்ததாகவும் ஒரு சில நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சுயநினைவுபெற்று இயல்பாக பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தில் சேர்ந்துள்ள 7 பெண்கள் தமக்கு உடல் சுகமில்லை என்று கூறியுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். அதே நேரம் அவர்களுக்கு எத்தகைய சுகவீனம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
பயிற்சி காலத்தில் இதுபோல நடப்பது சகஜம் என்றும் தினந்தோறும் இராணுவத்தில் சுமார் 2000 பேர் சுகவீன விடுப்பு எடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.