கோபிந்த்: தீபக்-கின் கடன்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது

gobindபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக வணிகரான தீபக் ஜெய்கிஷன் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு ஈடாக அவருடைய கடன்கள் தீர்க்கப்பட்டது குறித்த தகவல்கள் தமக்கும் பெட்டாலிங் ஜெய எம்பி டோனி புவா-வுக்கும் தெரியும் எனக் கூறப்படுவதை டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ நிராகரித்துள்ளார்.

“தீபக்கின் கடன்கள் பற்றியோ அவற்றை அவர் தீர்த்திருந்தால் அது பற்றியோ எங்களுக்கு எதுவும் தெரியாது என இங்கும் இப்போதும் நான் சொல்கிறேன்.”

“அந்த விவரங்கள் எங்களுக்குத் தெரிவதற்கு எந்தக் காரணமும் இல்லை,” என கோபிந்த் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கூறினார்.

அந்த ‘பேரத்தின்’ விவரங்களை வெளியிடுமாறு அந்த இரண்டு டிஏபி எம்பி-க்களுக்கும் பெர்க்காசா தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ருஸ்லானும் இடைக்கால பேராக் இளைஞர் தலைவர் பைசால் எபண்டி ஹாசினும் கேட்டுக் கொண்டுள்ளதற்கு அவர் பதில் அளித்தார்.

பிரதமருக்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் எதிராக தீபக் கூறிய குற்றச்சாட்டுக்கள் மீதான கவனத்தை திசை திருப்புவதை விடுத்து ஆதாரங்களை கொடுக்குமாறும் கோபிந்த அந்த இருவருக்கும் சவால் விடுத்தார்.gobind1

“அவர்களிடம் அதற்கு ஆதாரம் இல்லை என்றால் (நிச்சயம் அவர்களிடம் ஏதும் இல்லை)  அவர்கள் வாயை மூடிக் கொண்டு அண்மையில் தீபக் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்குமாறு பிரதமரையும் அவரது துணைவியாரையும் கேட்டுக் கொள்வது போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.”

கொலையுண்ட மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு-உடன் பிரதமரை தொடர்புபடுத்திய தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் மீட்டுக் கொள்ளுமாறு ரோஸ்மா கேட்டுக் கொண்ட பின்னர் செய்ததாக தீபக் கூறிக் கொண்டிருந்தார்.

 

TAGS: