கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா மன்றத்தில் உரை நிகழ்த்த சென்ற மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற அழைப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மீண்டும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் 28-ம் தேதி தொடக்கம் 3-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள வருகை தரவுள்ள மகிந்த ராஜபக்சேவை இலக்கு வைத்தே ஆஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறியமுடிகின்றது.
இதனிடையே ஆஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் உலகத் தமிழர் பேரவையின் அமர்வொன்றை அந்நாட்டில் நடத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் மற்றும் போர்க்குற்றங்களை உலகத் தலைவர்களுக்கு விளக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.