இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டம்

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்புக்கான தேசிய ரீதியான செயற்திட்டமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

மனித உரிமைகள் விவகாரத்துக்கான குடியரசுத் தலைவர் மகிந்தவின் விசேட பிரதிநிதியாக ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, பெண்கள் நலம், குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் உட்பட பல விடயங்கள் உள்ளடங்கும் விதத்தில் இந்த ஐந்தாண்டு காலதிட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தார்.

சகலரும் சம அந்தஸ்துள்ள பிரஜைகள் என்ற நிலைமை இந்த திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்த முன்னாள் மனித உரிமைகள் அமைச்சர், இதனால் நாட்டில் பயங்கரவாதம் என்ற ஒன்று இனிமேலும் உருவாகப் போவதில்லை என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் காவல்துறையினரால் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய பிபிசி, காவல்துறை காவலில் இருப்பவர்கள் கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கான கண்காணிப்பு நடைமுறை அரசாங்கத்தின் இந்த திட்டத்தில் உள்ளதா? என்றும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியது.

மனித உரிமைகள் விவகாரத்துக்கான பிரதிநிதி மகிந்த சமரசிங்க, உலகில் எந்த நாட்டில் துன்புறுத்தல்கள், கொடுமைகள் இல்லையென்று கேள்வி எழுப்பினார்.

கைதுகளின் போது, சிறந்த பயிற்சி, அனைத்துலக மட்டத்திலான தொழிநுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி விசாரணைகளை நடத்துவதற்கான நடைமுறைகளை இந்த புதிய திட்டத்தின் மூலம் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் ஏற்கனவே செயற்படும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை இன்னும் விரிவுபடுத்தி மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்புக்கான தேசிய மட்டத்திலான திட்டத்தை பலப்படுத்த முடியும் என்றும் இலங்கை குடியரசுத் தலைவரின் பிரதிநிதியும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான மகிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

-BBC

TAGS: