இலங்கையின் தலைமை நீதிபதி பணியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை பணி நீக்கம் செய்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஷிராணிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டுவந்திருந்த கண்டன பணி நீக்கத் தீர்மானத்தை ஆதரித்து நாடாளுமன்றம் வாக்களித்து ஓரிரு நாட்களில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு வருகிறது.
ஷிராணியை பொறுப்பிலிருந்து அகற்றும் உத்தரவில் ஞாயிறு காலை ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அவருடைய அலுவலகம் தெரிவித்தது.
இந்த உத்தரவு கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிடம் கிடைத்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு குறித்து உடனடியாக கருத்து வெளியிடுவதற்கு ஷிராணி மறுத்துவிட்டார்.
கண்டன பதவிநீக்க நடைமுறையில் முறைகேடுகள் இருக்கின்றன என்றும், இது சட்டத்துக்கு புறம்பானது என்றும் நாட்டின் உச்சநீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து அகல ஷிராணி மறுக்கவும் வாய்ப்புள்ளது.
“நீதித்துறை சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.