பாகிஸ்தான் பிரதமரை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

raja_pervez_ashraf_prime_minister_pakistanபாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப்ஐ கைதுசெய்யுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமரையும் அவருடன் சேர்த்து இன்னும் 15 பேரையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

2010-ம் ஆண்டில் நீர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தபோது, அரச செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை பர்வேஸ் அஷ்ரஃப் மறுக்கின்றார்.

இதேவேளை, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிரதமரின் உடனடி பதவி விலக்கலுக்கு வழியமைக்காது என்றே அவதானிகள் பெரும்பாலும் கருதுகின்றனர்.

அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க மதகுருவான தாஹிருல் காத்ரி ஆயிரக்கணக்கான மக்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி ஆரவாரங்களை வெளிப்படுத்தினார்கள்.

மக்கள் போராட்டத்திற்கும் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கும் சம்மந்தம் இருக்க முடியாது என்று சில கருத்துக்கள் இருக்கின்ற போதிலும், மதகுரு தாஹிருல் காத்ரியின் போராட்டத்துக்கு நீதித்துறை மற்றும் இராணுவத்தினரின் பின்புலம் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் பெருமளவில் நிலவுகின்றன.

பாகிஸ்தான் அரசாங்கம் அண்மைய ஆண்டுகளாகவே நீதித்துறை மற்றும் அதிகாரம் மிக்க இராணுவ-பாதுகாப்புத் துறையுடன் மோதல் போக்கில் இருந்துவருகின்றது.

அஷ்ரஃப்புக்கு முன்னதாக பிரதமராக இருந்த யூசுஃப் ராசா கிலானி, நாட்டின் அதிபருக்கு எதிராக இன்னொரு ஊழல் வழக்கை முன்னெடுக்கத் தவறியதால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதவியிழந்தார்.

அதனையடுத்து பிரதமராக அஷ்ரஃப் பொறுப்பேற்றார். அவருக்கும் பதவியில் பிரச்சனை வரும் என்று அவதானிகள் ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-BBC