தலைமை நீதிபதி நீக்கப்பட்டது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது

vicotira_nulandஇலங்கையின் தலைமை தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயக்காவை , ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கியது குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியினை தெரிவித்துள்ளது.

பதவியிறக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நிபந்தனைகளின் அடிப்படையில் திருப்திகரமானவை அல்ல என்று அமெரிக்க அரசுத்துறையின் பேச்சாளரான விக்டோரியா நூலண்ட் கூறியுள்ளார்.

இந்த விவகாரம்  இலங்கைக்கான அமெரிக்காவின் நிதி உதவிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இப்போதைக்கு கூறமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கான உதவிகள் குறித்த விடயத்தில், 2012 ஆம் நிதியாண்டில் இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளாக 27 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது என்றும், அதில் 13.3 மில்லியன் இரு தரப்பு உதவித்திட்டங்களுக்காக வழங்கப்பட்டது என்றும், அந்த அடிப்படையில் அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக திட்டங்களுக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

2013 ஆம் ஆண்டுக்கு 16.5 மில்லியன் டாலர்கள் உதவி இலங்கையினால் கோரப்பட்டுள்ளது என்றும், இந்த உதவிகள் மீது தற்போது அங்கு நடக்கும் விடயங்கள் என்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இப்போதைக்கு கூறமுடியாது என்றும் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.

அத்துடன், இன்னுமொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கையுடன் தாம் இது குறித்து தொடர்பு கொள்வோம் என்றும், ஆனால், அவர்களால் இந்த விடயம் குறித்து கூறப்படும் காரணங்கள் ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்ற நிலைமைகளை திருப்திப்படுத்துவதற்கு போதுமானவை என்று தன்னால் கூறமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

TAGS: