அண்ணா ஹசாரே இன்று காலை திடீர் கைது

வலுவான லோக்பாலை வலியுறுத்தி டெல்லியில் ஜெய்பிரகாஷ் நாராயன் பூங்காவில் இன்று முதல் (ஆக.16) காலவரையற்ற உண்ணாநோன்பு இருக்கப்போவதாக அறிவித்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவரை இன்று காலை கைது செய்தனர்.

அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அவர் இன்று காலை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

அண்ணா ஹசாரேவுடன் அவரது குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. இவர்களைக் கைது செய்து எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற தகவல் எதுவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்படவில்லை.

“என்னைக் கைது செய்தாலும், சிறையில் என்னுடைய உண்ணாநோன்பு போராட்டம் தொடரும்” என்று தெரிவித்திருந்தார் அண்ணா ஹசாரே.

அண்ணா ஹசாரே தீடிரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதால் டெல்லியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினரின் இந்த நடவடிக்கை அண்ணா ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அண்ணா ஹசாரேவை கைது செய்யவில்லை; சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அவரை அப்புறப்படுத்தி இருக்கிறோம் என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.