-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 9, 2013.
பக்காத்தான் மத்திய ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டில் இலவசக் கல்வித் திட்டத்தைச் செயல் படுத்தும் என்ற அன்வார் இப்ராகிம் வாக்குறுதி குறித்து இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகளில் கேள்வி எழுப்பியுள்ள ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான சரவணன், பக்காத்தான் ஆட்சியிலுள்ள வளமான சிலாங்கூரில் இப்பொழுதே அதனை ஏன் செயல் படுத்தவில்லை என்று கேட்கிறார்.
சரவணனின் சாவலுக்குத் தக்க ஆதாரத்துடன் சரியான புள்ளிவிவரங்களுடன் பதிலை வழங்க நாங்கள் தயார். ஆனால் பதிலுக்கு நாங்கள் எதிர் சவால் விட்டால் அதனை எதிர்க்கொள்ள சரவணனால் முடியுமா? அவரின் பதிலைத்தான் பாரிசான், தனது ஒட்டு மொத்த இயக்கத்தின் பதிலாக ஏற்க முன் வருமா? தன் பதிலுக்குப் பாரிசானை பொறுப்பு ஏற்கச் செய்யத்தான் சரவணனால் முடியுமா என்பதனை அவர் சிந்தித்திருந்தால் இந்தக் கேள்வியை அவர் கேட்டிருக்க மாட்டார். இந்திய சமுதாயத்திற்குப் பயனான இலவச உயர் கல்வியை மஇகா ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதையே அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
மஇகா தலைவர்களின் அறிக்கைகளை மக்கள் கவனித்தே வருகின்றனர். அவர்களின் அறிக்கைகள் மிகவும் பரிதாபத்திற்கு உரியவைகளாக இருந்து வருகின்றன. சரவணன் இந்தச் சமுதாயத்தின் மீது பற்றும் பாசமுள்ளவராக இருந்தால், அவர் சிந்திக்க வேண்டியது ஏழை இந்திய சமுதாயத்திற்கு இலவச உயர்கல்வி அவசியமா இல்லையா? அதனை வழங்கும் சக்தி இந்நாட்டுக்கு உண்டா இல்லையா? இலவச உயர்கல்வியினால் இந்திய சமுதாயத்திற்குப் பயன் உண்டா இல்லையா என்பதையே அவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இலவச உயர்கல்வி ஏழை இந்திய சமுதாயத்திற்கு மிக அவசியம் என்பதனை ஒப்புக்கொண்டால், இலவச உயர்கல்விக்கு முதலில் உங்கள் ஆதரவைப் பகிரங்கமாக வெளியிடுங்கள். அதன் பின் உங்கள் மஇகாவையும் ஆதரவு கொடுக்க வற்புறுத்துங்கள். அதன் பின் உங்கள் பாரிசானை பாருங்கள்.
அல்லது இலவச உயர்கல்வியை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனையாவது சொல்லி விடுங்கள். நீங்கள் லாரிகளிலிருந்து நமது முதியோர்களை நோக்கி விட்டெறியும் அரிசி மூட்டை மட்டுமே நமது உரிமை என்று எண்ணியிருந்தால், அதையாவது சொல்லிவிடுங்கள். எப்படியோ இலவச உயர்கல்வி விவகாரத்தில் என்ன உங்கள் நிலைப்பாடு என்பதனை மக்களுக்குத் தெளிவு படுத்துங்கள்.
அதை விட்டு உங்கள் சுய அரசியல் வாழ்வுக்காக, நீங்கள் பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்ளும் இந்திய சமுதாயத்தின் விருப்பத்தைக் கொல்லாதீர்கள். இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இலவச உயர்கல்வி பயனளிக்கும் என்ற ஆணித்தரமான சமுதாயத்தின் நம்பிக்கையைத் தகர்த்து இன்னும் 55 ஆண்டுகளுக்கு இச்சமுதாயத்தின் கண்களைக் கட்டி காட்சி நடத்திட ஆசைப்படக்கூடாது. அது உங்களுக்கு வாழ்வளித்த இந்திய சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் மகா பாதகமாகும்.
நம் மக்களின் தேவை எதுவோ, அதை நிறைவேற்றுவது ஆட்சியின் சிறப்பு. மக்களின் நோக்கத்தை அடையத் திட்டம் தீட்டி செயல் படுவதுதான் அரசாங்கத்தின் பணி. அதற்கு நாட்டையும் மக்களையும் தயார் படுத்துபவர்களே நல்ல தலைவர்கள்!
மற்ற எல்லோரும் என்ன என்பதனை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிலறிக்கைக்குக் காத்திருக்கிறேன்.
இந்தச் சமுதாயத்தின் நலன் கருதி எல்லாத் தமிழ்த் தினசரிகளும் என் பதிலை இருட்டடிப்பின்றி வெளியிடும் என்று நம்புகிறேன்.