அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை மகாதீர் நிறுத்த வேண்டும்

டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 13, 2013.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும்.

xavier3அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை, அம்பிகாவுக்கு மட்டும் விடப்பட்ட மிரட்டல் அல்ல! மாறாக, இந்நாட்டு மக்களின் சட்டபூர்வத் தேவைகளுக்குக் குரல் கொடுக்கும் மலாய்க்காரர்கள் அல்லாத அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.

இந்நாட்டில் வாழும் மற்ற இனத்தவர்கள் குடியுரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்று கூறியுள்ள டாக்டர் மகாதீரின் தற்போதைய அறிக்கை இந்நாட்டில் நீதிக்காகக் குரல் கொடுக்க மற்ற இனங்களுக்கு உரிமையில்லை என்ற அவரின் கருத்தை மறுவுறுதிப்படுத்துவதாக உள்ளது.

 
இது மிக ஆபத்தான வழிமுறை. இது குடிமக்களின் அடிப்படை  உரிமைகளைப் பறிக்கும் ஒரு பிற்போக்குச் செயலாகும். இது போன்ற அவரின் பல அறிக்கைகள் நீதிக்கு எதிரானதாகவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் அறிக்கைகளாகவும் இருக்கின்றன. பல இன மக்கள் வாழும் இந்நாட்டின் வளப்பத்திற்கும்,  முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும்  சவாலான  அறிக்கைகளை விட்டு மக்களின் பொறுமையை மகாதீர் சோதிக்கக் கூடாது.

நீண்டகாலம் சேவையாற்றிய ஒரு முன்னாள் பிரதமரான அவர் இப்படிக் குறுகிய இன மனப்பான்மை அரசியல் உணர்வுடன் பல விவகாரங்களின் மீது  கருத்து தெரிவிப்பதை அம்னோ கண்டு கொள்ளாமலிருப்பது, அக்கட்சி அதன் கொள்கைகளை மகாதீர் மூலம் இளம் மலாய்க்காரர்களிடம் பரப்பி ஒரு தீவிரவாதப் பிரிவினரை வளர்த்து வருவதாக என்ன தோன்றுகிறது.

அதற்குச் சான்றாக, பல்லின சமுதாய மக்கள் நீதியான தேர்தல் வேண்டி கோரிக்கை விடுத்துள்ள போது,ambiga1 பெர்சே தலைவர் அம்பிகாவை மட்டும் தனிமைப்படுத்தி அவரின் வீட்டு முன் பிட்டத்தை ஆட்டி நடத்தப்பட்ட போராட்டம், கோயில்கள் எழுப்பப்படுவதற்கு எதிரான ஆட்சேபங்கள், கிறிஸ்துவ வழிப்பாட்டு தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பைபிளை எரிப்போம் என்ற இப்ராஹிம் அலியின் மிரட்டல்கள் குறித்து எல்லாம் மக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய ஒரு முன்னாள் பிரதமர், அக்குழுவினரின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் ரீதியில் பேசி வருகிறார்.

மேலும், இந்நாட்டு சுதந்திரத்துக்கு முன் இங்குப் பிறந்து, வளர்ந்து, நாட்டு மேம்பாட்டுக்கும்  சுதந்திரத்துக்கும் போராடிய இந்திய, சீன மக்களுக்குப்  குடியுரிமை வழங்கியது தவறு என்றும், சபாவில் ஓட்டுக்காக அன்னியர்களுக்குக்  குடியுரிமை வழங்கிய தனது செயலை நியாயப்படுத்தி வரும் மகாதீர், வரும் தேர்தலில் பாரிசானுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுத்து, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து அம்பிகாவின் குடியுரிமையை பறிக்க வகை செய்ய வேண்டும் என்று பேசிவருகிறார். இது போன்ற அறிக்கைகள், இந்நாட்டு மக்களின் அடிப்படை  உரிமைக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இதர இனங்களின் தலைவர்களின் உரிமைகளை மிரட்டிப் பறிப்பதாகும்.

mahathirதனது பதவிக் காலத்தில் சட்ட விரோதமாக இலட்சக்கணக்கான அன்னியர்களுக்குக் குடியுரிமை கொடுத்து அதிகார அத்துமீறல்கள்  செய்தவர், தனது சொந்தப் பூர்வீகத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், அவர் மற்றவர்களின் குடியுரிமை தகுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பி வருகிறார். தனது பதவிக் காலத்தில் இந்நாட்டின் மாணவர்கள், தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், நீதிபதிகள், ஆட்சியாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினர் நலனுக்கும் கேடு விளைவித்தவர் டாக்டர் மகாதீர் என்பதனை நாம் அறிவோம்.

இவரின் கைப்பாவையாக மலேசியாவின் எந்த அரசும் ஆகிவிடக்கூடாது, மலாய்க்காரர்கள் அல்லாதவர் விவகாரங்களில்  இன்று அவர் வெளியிட்டு வரும் கருத்துகளும், அவர் ஆதரித்துவரும் சிறு தீவிரவாதக் கும்பல்களின் செயல்களையும் நாம் கண்டிக்கத் தவறினால், நாம் நமது உரிமையை அடமானம் வைத்தவர்கள் ஆகிவிடுவோம். 

 

 

 

TAGS: