‘பிஎன்னுக்கு மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்க மாட்டோம்’

1bnmajorityஉங்கள் கருத்து: ‘எதிர்தரப்பு பலமற்றிருந்ததால் பிஎன் 42 தடவை வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு அரசமைப்பில் 650 திருத்தங்களைச் செய்துள்ளது’.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுப்பதை எதிர்க்கிறார் ஆயர்

தெளிந்தநீர்: குறைந்தபட்சம்  அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்வழி அரசமைப்பில் அடிக்கடி திருத்தம் செய்வதைத் தடுக்க முடியும்.

எதிர்தரப்பு பலமற்றிருந்ததால் பிஎன் 42 தடவை வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு அரசமைப்பில் 650 திருத்தங்களைச் செய்துள்ளது.

சில திருத்தங்கள் விவாதமுமின்றியே செய்யப்பட்டுள்ளன. அப்படி நிகழ இனியும் அனுமதிக்கக்கூடாது. நமக்கு நல்ல அரசு தேவை. அதைக் கண்காணிக்க வலுவான எதிர்தரப்பும் தேவை.

கியுடைஸ்:  ஒருவர் நீண்ட காலம் தலைமைப் பொறுப்பில் இருக்க இடமளிக்கக்கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்கக் கூடாது என்பது சரியாகப் படவில்லை.

பிஎன் அதற்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதை வைத்து  எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்கக் கூடாது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.  அது பிஎன். ஆனால், எல்லாக் கட்சிகளுமே பிஎன்னைப் போலத்தான் என்று முடிவுகட்டுவது சரியல்ல.

அரசமைப்புப்படி, சில வேளைகளில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, பக்காத்தானுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லையென்றால் பிஎன் செய்த தவறுகளை அதனால் திருத்த முடியாமல் போகும்.

மேலும், பக்காத்தானுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைப்பதைத் தவிர்க்க சிலர் அதற்கு வாக்களிக்காமல் இருப்பதெனவும் முடிவு செய்து விடலாம். அப்படிச் செய்வதால், பக்காத்தானுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் கிடைக்காமல் அது புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற முடியாமல் போனாலும் போகலாம்.

மனோ: நல்ல நோக்கத்துடன்தான்  ஆயர் பால் டான் அப்படிக் கூறியுள்ளார். ஆனால், பக்காத்தானுக்கு இரண்டு தவணைகளுக்காவது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்கத்தான் வேண்டும். அப்போதுதான் பக்காத்தானால் பிஎன் செய்துள்ள சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியும்.

திமோதி: நம் எம்பிகள் அரசியல் முதிர்ச்சி அடைந்து எந்த விவகாரமானாலும், கட்சி அடிப்படையில் சிந்திக்காமல் மக்களுக்கு அதனால் நன்மையா என்பதை மட்டும் ஆராய்ந்து சுயமாக முடிவெடுத்து வாக்களிக்கும் நாள் ஒன்று வரும்.

அப்போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்பதெல்லாம் தேவைப்படாது. இப்போதைக்கு, இருக்கும் நிலைமையைத் துப்புரவுபடுத்த பக்காத்தானுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்று மனோ கூறுவதை நானும் ஏற்கிறேன்.

ஸ்டார்: எந்தவோர் அரசாங்கத்துக்கும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் அத்துமீறல், ஊழல், ஆணவம் முதலியவை தலைவிரித்தாடும். அம்னோ-பிஎன் அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுத்தோம். அதன் விளைவுகளை இன்று கண்கூடாகக் காண்கிறோம்.

எனவே. வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்கக் கூடாது. அதுவும் அம்னோ-பிஎன் அரசுக்குக் கூடவே கூடாது.

TAGS: