இலங்கையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுடப்பட்ட புலனாய்வுச் செய்தியாளர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சண்டேலீடர் பத்திரிகையின் செய்தியாளர் ஃபராஸ் சௌக்கத்அலி, கொழும்பில் புறநகர்ப்பகுதியான கல்கிசையில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளிக்கிழமை இரவு சுடப்பட்டார்.
கழுத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான நிலையில் அருகிலுள்ள களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌக்கத் அலி பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அறுவை கிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சண்டேலீடர் பத்திரிகை கடந்த காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த ஒரு புலனாய்வுச் செய்தி இதழ்.
புலனாய்வுச் செய்திகளை எழுதிவந்த சௌக்கத் அலி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு படுகொலை தொடர்பிலும் நீதி விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை என்கின்ற விமர்சனங்கள் தொடர்ந்தும் இருந்தவண்ணம் உள்ளன.