இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சட்டவிரோதமான ஆயதப் பிரிவுகளை இகரசியமான தங்குமிடங்களில் வைத்து நடத்திவருவதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினரையும் சந்தித்துப் பேசிய ரணில், வலிகாமம் வடக்கு மீள் குடியேற்ற அமைப்பினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.
நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றையும் நடத்தியிருக்கின்றார். இதில் எதிர்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரட்ன, அசாத் சாலி, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில், தமது வாழ்விடங்களில் தம்மை மீள்குடியேற அனுமதிக்கக் கோரி வலி வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் நடத்திய அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தில் சிலர் குழப்பம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு இராணுவ புலனாய்வாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விசாரணை நடத்த வேண்டும் அல்லது தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய உண்ணாவிரதத்தைக் குழப்பிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.