‘பர்மியர்களில் 100 பேர் வரை நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டனர்’

myanmarஇலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர்வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கிழக்குக் கரையிலிருந்து சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.

இவர்களுடன் குறித்த படகில் பயணித்த 98 பேர் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டுவிட்டதாக உயிர்தப்பிய பர்மிய நாட்டவர்கள் தெரிவித்துள்ளதாக அவர்களை சந்தித்து கலந்துரையாடிய பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்தார்.

காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட 32 பேரும் அவர்களின் உடல்நிலை காரணமாக கராப்பிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பர்மாவில் வங்கதேச எல்லையில் ராக்கைன் பிராந்தியத்தைச் சேர்ந்த இவர்கள் உள்ளூரில் பௌத்தர்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக தம்மிடம் கூறியதாக, அவர்களை சந்தித்துப் பேசிய காலி மாளிகாவில அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.

காப்பாற்றப்பட்டவர்களில் பலருக்கு உடலில் நீர்ச்சத்துக் குறைந்து பலவீனமாகக் காணப்படுகின்றனர்.

தமது பிரதேசத்தில் தொழில்வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 131 பேர் மூன்று படகுகளில் வந்து பின்னர் இரண்டு அடுக்குகள் கொண்ட இன்னொரு பெரிய படகொன்றுக்கு மாறியதாக உயிர் தப்பியுள்ளவர்கள் கூறுகின்றனர்.

பின்னர் மலேசியாவுக்குள் நுழைய முடியாது என்று தெரியவந்ததன் பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற போதே தாய்லாந்து செல்லும் வழியில் தமது படகு விபத்துக்குள்ளானதாகவும் பின்னர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காப்பாற்றப்பட்டவர்கள் தம்மை மீண்டும் பர்மாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அதனால் அடுத்தக் கட்டம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாகவும் அஸ்ஸஜி தேரர் கூறினார்.

TAGS: