இலங்கைத் தீவில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்யப் போவதாக ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகையான சண்டே லீடர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளரின் இக்கருத்து வெளிவந்துள்ளது.
இவ்விவகாரம் சிறிலங்காவுக்கு மேலதிக அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இறுதியாக சண்டே லீடர் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளானமை வருத்தமளிக்கின்றது.
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வாடிக்கையான விடயமாக மாறிவிட்டது. இதற்காக நாள்தோறும் சர்வதேசத்தினால் கண்டனங்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும் அதனை சிறிலங்கா அரசாங்கம் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை உரியமுறையில் நிறைவேற்றவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் சிறிலங்கா பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கும் வாய்ப்புக்கள் உள்ளது.