நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் இராணுவ ரீதியிலான அடக்குமுறையை வடக்கில் முன்னெடுத்து வருவதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
கொழும்பு – 7 இல் அமைந்துள்ள அசாத்சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விக்கிரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாது, இராணுவ ஆட்சியை வடக்கில் தற்போது கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக யாழ். தெல்லிப்பளையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவப் புலனாய்வாளர்கள் குழப்பம் விளைவித்தமையைக் கொள்ளலாம்.
இதேவேளை, ஒரு காலத்தில் இராணுவ சீருடையுடன் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவை சிவிலுடை அணிந்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது என்றார்.