தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதை ஐ.நா. சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பாலச்சந்திரன் குறித்த போர்க்குற்ற ஆதாரம் மட்டுமன்றி இன்னும் அதிர வைக்கும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக சனல் 4 அதிரடியாக அறிவித்துள்ளது.
சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கல்லும் மெக்ரே வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசைத் தண்டிக்க ஐ.நா. தவறியுள்ளது. ஆனால், இப்பொழுது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இதை ஐ.நா. சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்தமாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், சனல் 4 வெளியிட்ட புகைப்படங்கள் உலகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளை, சனல் 4 தொலைக்காட்சி போர் தவிர்ப்பு வலயம் என்ற ஆவணத்தை இந்தக் கூட்டத்தைத் தொடரை முன்னிட்டு வெளியிடவுள்ளது. இதுதொடர்பில் மேலும் மெக்ரே தெரிவித்திருப்பவை வருமாறு;
போர்வெற்றிகளுக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறுபவர்கள்தான் போர்க்குற்றத்ததையும் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் போர் குற்றத்தை தட்டிக்கேட்டகத் தவறினால் எதிர்காலத் தலைமுறை இதற்காக மீண்டும் புரட்சியில் இறங்கலாம். அதனால் அப்பகுதியின் அமைதிக்காக இப்பொழுதே இதை தட்டிக்கேட்க வேண்டியது அவசியம்.
இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் இராணுவத் தரப்புத்தான் பொறுப்பு. ஜனாதிபதி முப்படைத்தளபதி. அவரது சகோதரர் கோட்டாபய இராணுவச் செயலாளர். எனவே, இந்த குற்றங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு வகிக்கின்றார் என்றார் மெக்ரே.
இவ்வாறான போர்க்குற்றச்சாட்டுக்களை போலியானவை என்றும் மேற்குல சதி என்றும் இலங்கை கூறுகிறதே என்பதற்கு பதில் அளித்த மெக்ரே, இவை உண்மையானவை என்பதற்கான ஆதாரங்களை உறுதிசெய்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் இலங்கையின் இறைமையில் தலையீடக்கூடாது என்று இலங்கை சொல்வது குறித்துக் கேட்டபோது, ஐ.நாவில் இலங்கை உட்பட பல நாடுகள் இணைந்து தம் மக்களைப் பாதுகாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, எந்த நாடு குற்றங்களை பொதுமக்களுக்கு எதிராகச் செய்தாலும் அதைக்குறித்து கேட்க ஐ.நாவுக்கு முழு உரிமை இருக்கிறது என்றார்.
“பிரிட்டன், அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களுக்கு எதிராக நான் படம் தயாரித்திருக்கிறன். யாராக இருந்தாலும் போர்க்குற்றங்களுக்கு எதிராக நான் படம் தயாரித்திருக்கிறன். என்மீது குற்றம் சாட்டி அல்லது போலியான படங்கள் என்று குற்றம் சாட்டி இலங்கை தப்பிக்க முனைகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் நடவடிக்கையில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்றும் கடந்த ஆண்டு கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா நீர்த்துப்போகத் செய்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது என்றும் கல்லும் மெக்ரே தெரிவித்தார்.

























