நிறை வேற்றும் எண்ணமற்ற நஜிப்பின் வாக்குறுதிகள்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், மார்ச் 21, 2013.

XavierJayakumarகடந்த ஞாயிற்றுக்கிழமை  காப்பார் தேசிய இடைநிலைப்பள்ளிக்கு ம.இ.கா வின் விருந்தினராக வந்திருந்த பிரதமர்  இந்தியர்களுக்குப் பல  வாக்குறுதிகளை வழங்கிச் சென்றார்.  ஆனால், அந்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் நோட்டமிட்டால்,  அவரின் போலி தன்மைகள் நன்கு புலப்படும்.

நம் சமுதாயம் விழிப்படைய வேண்டும், கவர்ச்சிகளுக்குச் சீக்கிரம் மயங்கி விடுபவர்களாக நாம் இருக்கக்கூடாது. இது நாள் வரை நாம் ஏமாளியாக இருந்து எப்படியோ யார் யாரிடமோ ஏமாந்து விட்டோம். இனியும் அதே பாணியில் இருந்தால் அதன் பின் விளைவுகள்  மிகக் கடுமையாக  நமது சந்ததியைப் பாதிக்கும்.

கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிகள் காற்றில் போனதா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பாருக்கு  வருகை புரிந்த பிரதமர் வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு  காப்பாருக்கு வருகை புரிந்த போது கொடுத்த வாக்குறுதிகளையே இம்முறையும் மீண்டும் புதுப்பித்துள்ளார். அதற்கு மேல் எதுவுமில்லை. கடந்த ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டாரா?? இல்லையே! ஏன்  முடியவில்லை? நிறைவேற்றுவதற்கு  எந்த ஏற்பாட்டையும் அவர் செய்யவில்லை.

அவர் வாக்குறுதி அளித்த அவ்வருடத்திலேயே பொதுத்தேர்தலையும் நடத்த உத்தேசித்திருந்தார், அதனால் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நம்பினார். அப்படியே எவரும் கேள்வி கேட்டால் பிரதமர் கூறியவை கிடைக்கும் ‘’ இஞ்சி சப்பாத்தி ‘’ என்று சொல்லிச் சமாளித்து விடலாம் என்று கட்சிக்காரர்கள் எண்ணியிருந்தார். ஆனால்  அவரின் கெட்ட நேரம் தேர்தல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

ஒரு பள்ளியில் கழிவறைக்கும், மின்சுடலை கட்டுவதற்கும் பிரதமரே வாக்களிக்க வேண்டுமா?  கடந்த ஆண்டு காப்பாரில் மின்சுடலைக்கும், தமிழ்ப்பள்ளிகளின் கட்டடத்துக்கும்  அளித்த வாக்குறுதிகள் காற்றில் போய் விட்டனவா?  ஆனால் அதற்குப் பின், ஏற்பாட்டில் இறங்கி, சுபாங் ஜெயா நகராட்சி மன்ற ஒத்துழைப்புடன்  பூச்சோங்கில் ஒரு மின்சுடலையை பக்காத்தான்  கட்டி முடித்து விட்டதே!

உலுசிலாங்கூர் செரண்டாவில்  தமிழ்ப்பள்ளி கட்ட 2010 ம்  ஆண்டு உலுசிலாங்கூர்  இடை தேர்தலுக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறார்கள்?  தேர்தலில் தோற்றப் பிறகா?

பூச்சோங் கின்ராற தமிழ்ப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மலேசியாவில் புதிய  ஆறு தமிழ்ப்பள்ளிகளுக்கு  உரிமம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? அண்டாலாஸ் தொகுதியில் கட்டுமானத்திற்கான நிலத்துடன் காத்திருக்கிறேன், “நம்பிக்கை” மன்னன் நஜிப் அவர்களே!

1mano najibஇம்முறை காப்பாரில்  பிரதமர் வழங்கிய முக்கிய வாக்குறுதியில்  எஸ்,பி.எம் தேர்வில்  இந்திய மாணவர்கள் 12 பாடங்களை  எடுக்கலாம், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்கிறது என்கிறார், அது குறித்துக் கல்வியமைச்சரைக் கண்டு பேசி முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இதே பிரச்சனை 2009ம் ஆண்டில் தலையெடுத்ததே! அப்பொழுது புதிதாகப் பிரதமர் பதவி ஏற்றிருந்த டத்தோ ஸ்ரீ நஜி இதே போன்ற அறிவிப்பினையே செய்தார். ஆனால், கல்வி அமைச்சரை இப்பொழுதுதான்  கண்டு பேசியதாகப் பிரதமர் கூறியுள்ளார்.  ஆக, தமிழ்க் கல்வியும், தமிழ்மொழியும்கூட தேர்தல் “ஸ்டண்ட்” ஆகிவிட்டதா?

புக்கிட் ராஜாவில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும்  வீடாம், வரவேற்கிறோம், ஏன் அதனைப் பொதுத்தேர்தல் முடியும் வரை தள்ளிப்போட வேண்டும்? அந்தத் தோட்டம் மத்திய அரசாங்கத்தின் துணை நிறுவனமான சைம்டார்பிக்கு சொந்தமானதுதானே,  பிரதமர் கட்டளையிட்டால் அவர்கள் மறுக்கவா போகிறார்கள்? உடனடியாகத் திட்டத்தை ஆரம்பித்து  அவர்களுக்கு வீடு வழங்குங்கள், அதனை அனைவரும் வரவேற்பார்கள்!

அதனுடன் முழுக்க உங்கள் பொறுப்பிலுள்ள கூட்டரசு பிரதேசத்தினுள்ள புக்கிட் ஜாலில் தோட்டத்தையும் கவனியுங்கள். அந்தத் தோட்ட நிலமும் அரசாங்கத்துக்குச் சொந்தமானதுதான், அங்குள்ள தொழிலாளர்களுக்கு நான்கு ஏக்கர் நிலந்தானே  தேவைப்படுகிறது. அவர்களும்  எவ்வளவு காலத்துக்குத்தான் போராடுவார்கள், அவர்களும்  இந்தியர்கள்தான். அவர்களும் குடிமக்கள்தான்.  அவர்கள் மீதும்  கொஞ்சம் கரிசனம் காட்டுவாரா பிரதமர்?

ஆட்சி மாற்றம் வந்தால்தான் ஆடுவாரா?

தேர்தல் வரும் போது போட்டி போட்டுக் கொள்ளலாம், அதற்கு நாங்கள்  தயார். ஆனால் மக்களின் அடிப்படை தேவைகளில், கல்வியில், தமிழ்ப்பள்ளி விவகாரங்களில்  தமிழர்களை ஏமாற்றாதீர்கள். பத்துமலையில் கொண்டோமினிய கட்டுமானத்தை நிறுத்தவும் ஆட்சி மாற்ற வேண்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டவும் ஆட்சிமாற வேண்டும், மின்சுடலை கட்டவும் ஆட்சிமாற வேண்டும், தமிழ்ப்பள்ளிகளில் கழிவரை கட்டக்கூட ஆட்சியை ஒப்படையுங்கள் என்பது மிக வேடிக்கையான, உலகளவில் மிகக் கீழ்த்தரமான அரசியலாகும். மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரமும், வரிப்பணமும் பிரதமர் அரசியல் விளையாட அல்ல; மக்களுக்குச் சேவையாற்ற  என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

TAGS: