மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தம் நடப்பு நாடாளுமன்றத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் நின்றால் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது, அதனால்தான் அதைவிட்டு “ஓடுகிறார்” என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார்.
“அவர் பெர்மாத்தாங் பாவைவிட்டு ஓடிப்போக விரும்புகிறார்… இது சுதந்திர நாடு. அவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்”, என மகாதிர் இன்று ஸ்ரீகெம்பாங்கானில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அன்வார் தம் சொந்த இடத்தைவிட்டு பேராக்கில் போட்டியிடலாம் என்று அறிவித்திருப்பது பற்றி செய்தியாளர்கள் வினவியதற்கு மகாதிர் இவ்வாறு பதிலிறுத்தார்.
“ஓடிப்போக விரும்புகிறார்” என்பதை விளக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு அங்கு வெற்றிபெற முடியுமா என்பதில் அவருக்கு ஐயம் வந்துவிட்டது என மகாதிர் கூறினார்.
“வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இல்லை போலும். அதனால்தான் அங்கிருந்து ஓடுகிறார்”, என்றார்.
வரும் பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சியின் முக்கிய புள்ளிகள், குறிப்பாக டிஏபியில் உள்ளவர்கள், புதுப்புது தொகுதிகளைக் குறி வைத்திருப்பதுபோலத் தெரிகிறது. லிம் கிட் சியாங்கும் லியு சி தொங்கும் அம்னோ கோட்டையாக திகழும் ஜோகூரில் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.