புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற 97 இலங்கையர்கள் அம்பாறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் ஒலுவில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 39 ஆண்களும், 18 பெண்களும், 40 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை, சிலாபம், நீர்கொழும்பு, பதுளை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தோனேஷியாவின் மிலாங் கடற்பகுதியில் படகொன்றில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 21 இலங்கையர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் சுமார் ஒரு வாரகாலம் உணவு, குடிநீர் எதுவுமின்றி கடலில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அவர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணத்தை தொடர முடியாது போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேஷிய மீனவரொருவர் வழங்கிய தகவலுக்கமைய இந்தக் குழுவினர் அந்நாட்டு போலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.