தற்போது அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளை ஒத்த செயற்பாடு உடையவர்களாலேயே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளை ஒத்த செயற்பாடுடையவர்களாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு அன்று உருவெடுத்தது.
இந்நிலையில், அவ்வாறான ஒரு அமைப்பு இன்மேல் உருவெடுக்காதிருக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அடங்கியுள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை தேர்தல்களை நடத்துதல் போன்ற பரிந்துரைகளையாவது நிறைவேற்றி சிறுபான்மை மக்களின் நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறினால் சர்வதேச நாடுகள் பலவற்றின் அழுத்தங்களுக்கு எமது நாடு தள்ளப்படும் நிலை உருவாகும். இருப்பினும் அரசாங்கத்திற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் சிறிதளவேனும் நோக்கமில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.