கொழும்பு: “எனது அரசு, மத மற்றும் இனவாதத்தை ஆதரிக்காது,” என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில், மாமிச உணவுகளில், ‘ஹலால்’ முத்திரை இடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாமிச உணவுகளில் தற்போது, ‘ஹலால்’ முத்திரை இடப்படுவதில்லை.
இலங்கையில், முஸ்லிம் தீவிரவாதம் பரவி வருவதாகக் கூறி, கடந்த வாரம், இஸ்லாமியர் நடத்தும் துணி கடை மீது, புத்த மதத்தினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மத விழா ஒன்றில்மகிந்த ராஜபக்சே பங்கேற்று பேசியதாவது: இலங்கை ஜனநாயக நாடு. இங்கு, புத்த மதத்தினர் அல்லாதவர்களுக்கும் சம உரிமை உண்டு. மதவாதம், இனவாதம் போன்றவற்றை, என் அரசு அனுமதிக்காது. மத தீவிரவாதம் ஆயுத கலாசாரத்துக்கு வழி வகுக்கும்; இதனால், இலங்கைக்கு அவப்பெயர் தான் உண்டாகும்.
புத்த மதத்தினர், மற்றவர்களின் மத சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும். தாய் நாட்டை நேசிப்பவர்கள், மற்றவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.இவ்வாறு, ராஜபக்சே பேசினார்.