காணி வழங்கும் அதிகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

resettlement_puthukudiyiruppuஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதிகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

விதிகளுக்கமைய அரசாங்க காணிகளை மக்களுக்கு வழங்கும் அதிகாரம் மாவட்ட செயலாளருக்கு மட்டுமே இருந்துவருகின்ற சூழ்நிலையில், மாவட்ட செயலாளரை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதியின் விசேட குழு மக்களுக்கு காணிகளை வழங்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளது என இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற நிபுணர் குழுவுக்கு அரச காணிகளை மக்களுக்கு வழங்கும் அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சகோதரரும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்த மனுவில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

வரும் ஜூன் 7ஆம் தேதி இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

இதேவேளை, நாட்டில் யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகளாகின்ற நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திருப்தியளிக்கத்தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்று பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்த 3 இலட்சம் பேரை முன்னுரிமை அடிப்படையில் மீள்குடியேற்றம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில், வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களையும் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டதனால் இடம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ள இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கென மூன்று இடங்களில் காணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கூறியிருந்தார்.

இதற்கிடையில் காணிகள் தொடர்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை, தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணி அமைச்சுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்திருக்கின்றது.

TAGS: