இலங்கை தூதருக்கு இந்தியா பாடம் : விசா தராமல் இழுத்தடிப்பு

passport_slசென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ள துணை தூதருக்கு, விசா தராமல், இந்தியா காலம் கடத்துவதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில், 2009ல் நடந்த சண்டையின்போது, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்காத ராஜபக்ஷே அரசுக்கு, தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு சுற்றுலா வந்த இலங்கை பயணிகளும், புத்த பிட்சுகளும் சமீபத்தில் தாக்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன், அடிக்கடி போராட்டம் நடப்பதால், கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு தூதரகத்தை மாற்ற, இலங்கை அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு, துணை தூதராக சபருல்லா கான் என்பவரை, அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.இவருக்கு விசா வேண்டி, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து, இலங்கை வெளியுறவு செயலர் அமுனகாமா கூறியதாவது:இலங்கை தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சபருல்லா கானுக்கு விசா கிடைத்த பின், சென்னையில் பொறுப்பேற்பார். ஆனால், அவருக்கு இதுநாள் வரை விசா கிடைக்கவில்லை. இந்திய அரசு, இதுவரை விசா தருவதில், இவ்வளவு தாமதம் காட்டியதில்லை. எனினும், விசா கிடைக்கும் வரை காத்திருப்போம்.இவ்வாறு, அமுனகாமா கூறினார்.

இதுவரை, இலங்கை கூறிய கருத்துகளை ஏற்று வந்த இந்திய அரசு, சமீபகாலமாக, அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம், அதிபர் ராஜபக்ஷேயின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இந்தியாவுக்கான துணை தூதருக்கு விசா வழங்க மறுக்கப்படுகிறது என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

TAGS: