இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசின் நடவடிக்கை குறித்து தாம் பொறுமை இழந்துள்ளதாக ஐ.நா மன்றத்தின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.
நோர்வேயில் திங்கட்கிழமை ஆரம்பமான ‘உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பான் கீ மூன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது இலங்கை தொடர்பாக நீண்ட நேரம் கருத்து தெரிவித்த ஜ.நா செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை விடயத்தில் நான் ஒரு விசேட நிபுணர் குழுவை அமைத்திருந்தேன். அது உங்களுக்கு நினைவிருக்கும். அவர்கள் அனைத்தையும் நன்கு கவனத்தில் எடுத்து பல பரிந்துரைகளை தெரிவித்திருந்தார்கள். எனது நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் நிச்சயமாக இலங்கை அரசினால் அமுல்படுத்தபட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. இலங்கை அரசாங்கம் எனது நிபுணர் குழு அறிக்கைக்கு சாதகமான பதிலை தரும் என்றும் நீண்ட நெடும்காலம் நான் காத்திருந்தேன். அதுபோல் அவர்கள் எனது நிபுணர் குழு அறிக்கையை அமுல்படுத்துவார்கள் எனவும் காத்திருந்தேன். ஆனால் தற்போது பொறுமை இழந்துவிட்டேன்” என்று அவர் கூறினார்.
இதனிடையே நிபுணர்க் குழு அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்க்கும் ஆணையத் தலைவரின் பரிசீலனைக்கு உட்படுத்துமாறும் தாம் வலிறுத்தி அனுப்பி வைத்துள்ளதாக பான் கீ மூன் மேலும் குறிப்பிட்டார்.